விஜய்க்கு அடுத்த ஷாக்… தவெகவில் இணைந்த வேகத்திலேயே மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய முக்கிய புள்ளிகள்… செங்கோட்டையனுக்கு மரண அடி கொடுத்த இபிஎஸ்…!

By Nanthini on தை 12, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான  செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்தார். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர் தவெகவில் இணைந்ததை விஜய் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார். செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் தங்கள் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று விஜய் தெரிவித்தார். அவருக்கு கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டலத்திற்கான முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.

இருப்பினும், இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து செங்கோட்டையனுடன் தவெகவில் இணைந்த சில முக்கிய நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவிற்கே திரும்பியதாக வரும் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெகவின் உட்கட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக இவர்கள் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. கோவையில் சமீபத்தில் தவெக-வில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் சிலர், நேற்று இரவு திடீரென அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்பி வேலுமணி முன்னிலையில் மீண்டும் தங்களை தாய் கழகமான அதிமுகவிலேயே இணைத்துக் கொண்டனர்.

   

ஏற்கனவே கடலூர் விசிக முக்கிய நிர்வாகி அதியமான் தவெக-வில் இணைந்த ஒரே வாரத்தில் மீண்டும் திருமாவளவன் முன்னிலையில் விசிகவுக்கே திரும்பினார். தற்போது கோவையிலும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே இவர்கள் தாய் கழகமான அதிமுகவிற்கே திரும்பியது விஜய் மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த திடீர் திருப்பம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.