கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியில் அரபிக்கடலோரத்தில் பேக்கல் கோட்டை என்ற சுற்றுலாத்தளம் அமைந்துள்ளது. இது காசர்கோட்டையில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இங்குதான் பம்பாய் படத்தில் இடம்பெற்ற உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு பாடல் படப்பிடிப்பு நடந்தது.
பம்பாய் படம் வெளியாகி ஏறக்குறைய 32 ஆண்டுகளான நிலையில் பேக்கல் கோட்டை பகுதிக்கு பம்பாய் படத்தை இயக்கிய இயக்குனர் மணிரத்னம், அந்த படத்தின் நாயகி மனிஷா கொய்ராலா மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஆகியோர் சமீபத்தில் சென்றனர். அந்த இடத்தை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது நடிகை மனிஷா கொய்ராலா கூறியதாவது, பம்பாய் படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த இடத்தில் ஒரு அழகான மிகச்சிறந்த பாடலை நாங்கள் படமாக்கினோம். இந்த லொக்கேஷனை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சியாக கூறினார்.
அடுத்து அவருக்கு அருகில் இருந்த இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது, இங்கு மீண்டும் வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அன்று பார்த்த பல இடங்களை இப்போது என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் அந்த உணர்வும் நெகிழ்ச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. இந்த பேக்கல் கோட்டை கேரளா சுற்றுலாத்தலங்களின் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
