கேரளாவில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரி டிக்கெட்டிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கும் சுவாரசியமான சம்பவம், அப்படியே ஒரு சினிமா காட்சியைப் போல அரங்கேறியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் தளாவடி பஞ்சாயத்து பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் அச்சம்மா குஞ்சு என்ற மூதாட்டி, காருண்யா லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். வழக்கமாக லாட்டரி முடிவுகளைப் பார்க்கும் அவர், இந்த முறையும் தனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா எனச் சோதித்துள்ளார்.
பரிசு முடிவுகளைச் சரிபார்த்தபோது, ஒரு டிக்கெட்டிற்கு 5,000 ரூபாய் பரிசு விழுந்திருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், கையில் இருந்த மற்றொரு டிக்கெட்டிற்குப் பரிசு ஏதும் இல்லை எனத் தவறாகக் கருதி, அதை அலட்சியமாகத் தனது கடையிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அந்த ஒரு முடிவுதான் அவரது வாழ்க்கையையே மாற்றப்போகும் ஒரு கோடிக்கான டிக்கெட் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
வீட்டிற்குச் சென்ற அச்சம்மாவுக்கு அவரது சகோதரர் போன் செய்து, அவர் வாங்கிய டிக்கெட்டிற்குத் தான் முதல் பரிசான ஒரு கோடி ரூபாய் விழுந்திருக்கிறது என்ற நற்செய்தியைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த மூதாட்டி, அந்த டிக்கெட்டை குப்பையில் வீசியதை நினைத்து பதறியுள்ளார். உடனடியாகத் தனது சகோதரருடன் நள்ளிரவு என்றும் பாராமல் கடைக்கு விரைந்து சென்ற அவர், அங்கிருந்த குப்பைத் தொட்டியை மொத்தமாகக் கொட்டி சல்லடை போட்டுத் தேட ஆரம்பித்துள்ளார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, குப்பைகளுக்கு இடையே ஒளிந்திருந்த அந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கெட் பாதுகாப்பாகக் கிடைத்துள்ளது. சினிமா கிளைமாக்ஸ் போல நடந்த இந்தத் தேடுதல் படலத்திற்குப் பின், நிம்மதிப் பெருமூச்சு விட்ட அச்சம்மா தற்போது அந்த டிக்கெட்டை அதிகாரிகளிடம் ஒப்படைத்து பரிசுத் தொகையைப் பெறத் தயாராகி வருகிறார். “கடவுள் கொடுக்க நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது” என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி எனப் பகுதி மக்கள் வியப்புடன் பேசி வருகின்றனர்.
