“உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்”… ரீல்ஸ் காட்டி 20-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கொடூரம்…. இன்ஸ்டாகிராம் ‘Influencer’ முகமூடி கிழிந்தது….!

By Nanthini on மாசி 22, 2026

Spread the love

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில், சமூக வலைதளம் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பிரபல இன்ஸ்டாகிராம் நபர் யது கிரிஷ் (38) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமண ஆசை காட்டி பல பெண்களை தனது வலையில் வீழ்த்திய இவர், அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், அந்தத் தப்பாரமான செயல்களை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

திருச்சூர் தான்யம் பகுதியைச் சேர்ந்த இவர், இன்ஸ்டாகிராம் வாயிலாகக் கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களுடன் நட்பு ரீதியாகப் பழகி வந்துள்ளார். தன்னை ஒரு செல்வாக்கு மிக்க நபராகக் காட்டிக்கொண்டு, பெண்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். பின்னர் அவர்களைத் தனி இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதனைத் தனது அலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டு, அதை வைத்தே பெண்களைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

   

பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்று பேர் தைரியமாக முன்வந்து அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் யது கிரிஷ் சுமார் 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை இதே பாணியில் ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அம்பலமானது. மேலும், சில பெண்களை மிரட்டி அவர் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அலைபேசியில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

   

தற்போது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமைப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு யது கிரிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மானத்திற்கு அஞ்சி புகார் அளிக்கத் தயங்கும் மற்ற பெண்களையும் கண்டறிந்து அவர்களிடம் வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்தச் சம்பவம் ஒரு அபாய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.