பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள சீகேஹள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கள்கிழமை நடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே இன்னும் ஆறாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளர் சுந்தர், அவருடைய மனைவி முத்துலட்சுமி மற்றும் இவர்களுடைய 19 வயது மகள் சுப்ரியா ஆகிய மூவரும் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இக்கொலை வழக்கு தொடர்பாக, தப்பியோடிய சுந்தரின் மூத்த மகளான 24 வயது சுவேதாவை புதுச்சேரி ரயில் நிலையம் அருகே போலீஸார் கைது செய்துள்ளனர். பெற்றோரைத் தானே கத்தியால் குத்திக் கொன்றதாக சுவேதா அளித்துள்ள வாக்குமூலம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர வைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சுவேதா போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது வீட்டில் தனக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை என்றும், கடுமையான மன அழுத்தத்திலும் தனிமையிலும் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது சோகங்களை டைரியில் தொடர்ந்து எழுதி வந்த சுவேதா, கென்னத் என்ற இளைஞரைத் காதலித்துள்ளார். ஆனால், இவர்களது காதலுக்கு தாய் முத்துலட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வேலையை ராஜினாமா செய்துவிட்டு காதலனுடன் புதிய தொழில் தொடங்க சுவேதா பல இடங்களில் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் நோட்டீஸ்கள் பெற்றோரின் வீட்டு முகவரிக்குச் சென்றதால், தாய்க்கும் மகளுக்கும் இடையே சம்பவத்தன்று சீகேஹள்ளியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆத்திரத்தில் தாய் முத்துலட்சுமியை சுவேதா கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அப்போது காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்த காதலன் கென்னத், பின்னர் உடலை குளியலறைக்கு இழுத்துச் செல்லவும் ரத்தக் கறைகளை சுத்தம் செய்யவும் மட்டுமே உதவினார் என சுவேதா கூறியுள்ளார். இதற்கிடையே, முத்துலட்சுமி போனை எடுக்காததால் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்த தங்கை சுப்ரியாவையும், தொடர்ந்து சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை சுந்தரையும் பயத்தின் காரணமாகத் தானே கத்தியால் குத்தியதாக சுவேதா தன் வாக்குமூலத்திலும், அவர் எழுதிய டைரியிலும் விவரித்துள்ளார்.
இருப்பினும், இந்த வழக்கில் தந்தை சுந்தர் உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் போலீஸாரிடம் அளித்த மரண வாக்குமூலம் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், “கென்னத்தான் எங்களைக் கத்தியால் குத்தினார்” என்று சுந்தர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதால், இந்த கொடூரக் கொலையில் கென்னத்தின் நேரடிப் பங்கு என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்குப் பிறகு இருவரும் பைக் மூலம் திருவண்ணாமலைக்குத் தப்பி ஓடியுள்ளனர்; அங்கு பைக் பழுதானதால் சுவேதாவை மட்டும் புதுச்சேரி பேருந்தில் ஏற்றிவிட்டு கென்னத் தலைமறைவாகியுள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் கென்னத்தைப் பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
