உத்திரபிரதேசம் மாநிலத்தில் மகன் ஒருவர் தன்னுடைய தாயின் உடலை வாங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்த ஷோபா தேவி என்ற பெண் நீண்டகால உடல்நல குறைவால் முதியோர் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மூத்த மகன் சடலத்தை உடனடியாக வீட்டுக்கு கொண்டு வர மறுப்பு தெரிவித்துள்ளார். முதியோர் இல்லத்தில் இருந்த நிர்வாகிகளிடம், நீங்கள் என் தாயின் சடலத்தை நான்கு நாட்களுக்கு டீப் ஃப்ரீசரில் வைத்திருங்கள்.
இப்போதைக்கு வீட்டில் கல்யாண விழா நடந்து கொண்டிருக்கிறது. சடலத்தை தற்போது வீட்டுக்கு கொண்டு வந்தால் அபச குணமாகிவிடும். திருமணத்திற்குப் பிறகு நான் வந்து எடுத்து செல்கிறேன் என்று மகன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து முதியோர் இல்ல ஊழியர்கள் வேறு குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் விரைந்து வந்து சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் இறுதி சடங்குகளை செய்வதற்கு பதிலாக குடும்பத்தினர் ஷோபா தேவியின் உடலை புதைத்து விட்டனர். நான்கு நாட்களுக்குப் பிறகு சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து தகனம் செய்வதாக உறவினர்கள் கூறியதாக உயிரிழந்த சோபா தேவியின் கணவர் தெரிவித்துள்ளார். மேலும் முதியோர் இல்லத்தில் இருந்தபோது மகன்களில் இளையவர் மட்டுமே எப்போதாவது தொலைபேசியில் அழைத்து விசாரிப்பார் என்றும் குடும்பத்தில் வேறு யாரும் அவர்களை சந்திக்க வந்தது கிடையாது என்றும் தெரிவித்துள்ள தகவல் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
