மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலக்கப் போவது யாரு (கேபிஒய்) புகழ் பாலா, தனது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தில், 20 ஆயிரத்தை மட்டும், வீட்டு வாடகைக்கு எடுத்து வைத்துக்கொண்டு மீதி 2 லட்சம் ரூபாயை, தலா ஆயிரம் ரூபாய் வீதம், 200 குடும்பங்களுக்கு கொடுத்து உதவி இருக்கிறார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ரஜினி, கமல், தனுஷ், சியான் விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி போன்றவர்கள் கிள்ளிக்கொடுக்கவே யோசிக்கும் சமயத்தில், ஒரு வளரும் இளம் நடிகரான பாலா, தன்னிடம் இருந்து பணத்தை அள்ளிக்கொடுத்து உதவி இருக்கிறார். இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதுபோல் அறந்தாங்கி நிஷா, உணவு வழங்கி இருக்கிறார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி தரப்பில் இருந்து ரூ. 10 லட்சம் முதல்கட்ட நிவாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரப்பட்டுள்ளது. பாக்யராஜ் மகன் சாந்தனு, டிவிட்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்படுவதற்கான கம்யூனிகேட் செய்து, மீட்பு குழுக்கள் மூலம் மக்களை மீட்க உதவியிருக்கிறார். விஜய் அஜீத் ரசிகர்கள், யாரும் சொல்லாமலேயே களத்தில் இறங்கி பலருக்கும் உதவி இருக்கின்றனர். ஆனால் கொடி, பதாகைகளை உயர்த்திப் பிடித்து அதை விளம்பரப்படுத்தி உதவுவதை விஜய் ரசிகர்கள் தவிர்த்து இருக்கலாம்.

சமீபத்தில் ரிலீசான நாடு படம், மழையால் தோல்வியடைந்தாலும் அதற்காக வருத்தப்படாமல் அந்த படக்குழு மற்றும் நடிகர் தர்ஷன், இயக்குநர் சரணன் போன்றோர் மழைவெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உதவியுள்ளனர். பார்க்கிங் படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாணன், படக்குழு சார்பிலும் பல உதவிகள் செய்யப்பட்டுள்ளன. நடிகர் பார்த்திபனும் உணவு பொட்டலங்களை பலருக்கும் வழங்கியுள்ளார். இயக்குநர் தங்கர்பச்சான், பெரிய டாப் ஸ்டார் நடிகர்கள், தங்களது ரசிகர்களை அனுப்பி மழை பாதிப்புகளை சீராக்க உதவுங்கள் என்ற நியாயமான கோரிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

சின்ன சின்ன நடிகர்கள் கூட தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சென்னை மாநகரை, புரட்டிப்போன மிக்ஜம் புயலால், கனமழையால் மக்கள் தவித்துவரும் நிலையில் பெரிய நடிகர்கள் தரப்பில் இருந்து, அதாவது நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் இருந்து, மக்களுக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை. இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துவருகின்றனர் என்பதுதான் மிக கசப்பான உண்மை.
