பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வரும் தேர்தலில் பெருந்துறை தொகுதியின் வேட்பாளராக ஜெயக்குமார் போட்டியிடுவார் எனத் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே, வேட்பாளரை இவர் தான் என்று மேடையில் அவர் உறுதிப்படுத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையமே இன்னும் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்யாத சூழலில், மூத்த தலைவர் ஒருவர் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்தது கட்சித் தலைமையையும் ஆதரவாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே சட்டப் போராட்டங்கள் காரணமாகப் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் நிலையில், செங்கோட்டையனின் இந்த அதிரடி பேச்சு சர்ச்சையை விசிறிவிட்டுள்ளதுடன், அப்பகுதியில் பெரும் அரசியல் பரபரப்பையும் தோற்றுவித்துள்ளது.
