பாஜகவில் இருந்து வெளியேறி அண்ணாமலையோடு கைகோர்த்த முக்கிய புள்ளி… யார் இந்த கரு நாகராஜன்?…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளராகக் கரு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜாகவிலிருந்து விலகி இந்த அமைப்பைத் தொடங்கிச் செயல்பட்டு வரும் அண்ணாமலை, விரைவில் அதை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அமைப்பின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, அவரது ஆதரவாளர்களிடையே புதிய சுறுசுறுப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பில் ஆன்லைன் வாயிலாக சுமார் 19.95 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். முதற்கட்டமாகக் களத்தில் இறங்கி நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தும் சமூகப் பணிகளில் அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார். இருப்பினும், அண்ணாமலை அரசியல் களத்தில் முன்புபோல அதிரடி காட்டாமல் அமைதி காத்துவந்ததால், அவர் கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி ஆதரவாளர்கள் மத்தியில் நிலவிவந்தது. இந்நிலையில், அமைப்பின் முதல் முக்கிய நிர்வாகியாகக் கரு. நாகராஜனை நியமித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பு அந்த ஐயங்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது.

   

பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கரு. நாகராஜன், அரசியல் களத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சென்னையில் வளர்ந்தவர். ஆரம்பத்தில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இயங்கிய இவர், 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் 2016-ல் பாஜகவில் இணைந்து, மைலாப்பூர் தொகுதி சட்டசபைத் தேர்தலிலும், 2017-ல் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

தமிழக பாஜகவில் மாநிலப் பொதுச்செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்த கரு. நாகராஜன், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக விளங்கியவர். அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியபோது, அவருடன் இணைந்து கட்சியிலிருந்து வெளியேறினார். தற்போது அமைப்பின் முதன்மைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அமைப்பை வலுப்படுத்தி, ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை இவர்கள் வேகப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.