தமிழக அரசியல் களத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திரு.வி.க நகர் தொகுதி உறுப்பினராகப் பொறுப்பேற்றவர் தவெக எம்.எல்.ஏ பல்லவி. தேர்தல் பிரச்சாரக் காலத்திலேயே கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, தேர்தல் முடிந்து சில நாட்களிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு ‘தமிழன் வெற்றி கொண்டான்’ எனப் பெயர் சூட்டியுள்ள பல்லவி, சட்டமன்றக் கூட்டத்தொடர், பட்ஜெட் தாக்கல், அரசு மற்றும் கட்சித் திட்டத் தொடக்க விழாக்கள் எனத் தான் செல்லும் அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் தனது கைக்குழந்தையைத் தவறாமல் அழைத்துச் சென்று வருகிறார்.
இருப்பினும், அதிகளவில் கூட்டம் கூடும் இடங்களுக்கும் குழந்தையை அழைத்துச் செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் விஜய்யைக் காண திரண்டிருந்த பெரும் கூட்டத்தில் குழந்தையுடன் அவர் சிக்கிக் கொண்டது கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்கியது. இந்த வரிசையில், சென்னை ஐ.ஐ.டியில் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சியிலும் பல்லவி குழந்தையுடன் கலந்துகொண்டார். அங்கு வந்திருந்த நடிகை கஸ்தூரி அக்குழந்தையைக் கொஞ்சும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், இச்சம்பவம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் காட்டமான கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “பணியிடங்களில் குழந்தைப் பராமரிப்பு மையங்கள் அமைப்பது, மகப்பேறு மற்றும் தந்தைக்கான விடுப்பு அளிப்பது போன்ற குடும்ப நலச் சட்டங்களையும் கொள்கைகளையும் நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இருப்பினும், கைக்குழந்தையைத் தொடர்ந்து இதுபோன்ற பெரும் பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது என்பது அரசியல் ரீதியான வெளிச்சம் தேடும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது. இது குறித்து தவெக தலைவர் விஜய், அவருக்குத் தகுந்த அறிவுரை வழங்குவார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தவெக எம்.எல்.ஏ பல்லவியின் இந்தச் செயலுக்கு சமூக வலைதளங்களில் ஒருதரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் விமர்சனமும் தெரிவித்து வந்த சூழலில், தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பியே பகிரங்கமாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
