தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை இயக்கினாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் தான் கார்த்திக் சுப்புராஜ். இன்ஜினியரிங் படித்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கு இன்ஜினியரிங் செட் ஆகாது சினிமா தான் என்ற முடிவுக்கு வந்து குறும்படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவருடைய தயாரிப்பில் அவியல், மேயாத மான், கள்ளச் சிரிப்பு, பென்குயின் உள்ளிட்ட படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான பெருசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தவிர பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என முன்னணி நடிகர்களை வைத்து பல பெரிய படங்களை இயக்கி கார்த்திக் சுப்புராஜ் வெற்றி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் சூர்யாவை வைத்து ரெட்ரோ திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்படத்தில் இருந்து வெளியான கண்ணாடிப் பூவே முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் வருகின்ற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தளபதி விஜயின் கடைசி படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது விஜயின் கடைசி படத்தை எச் வினோத் இயக்கி வருகின்றார். இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசுகையில், நானும் விஜய் சார் கிட்ட நிறைய டைம் கதை சொல்லி இருக்கேன்.

ஜிகர்தண்டா படம் பார்த்துட்டு அவரே போன் பண்ணி படம் நல்லா இருக்குன்னு பாராட்டினார். ரஜினி சார் கிட்ட கதை சொல்லும் போது ஏதோ ஒன்று எனக்கு வந்துரும். ஆனா விஜய் சார் கிட்ட கதை சொல்லும் போது அவருக்கு செட் ஆகுற மாதிரி கதை அமையல. அவள் கூட என்கிட்ட சொன்னாரு உங்களுக்கு எனக்கும் செட் ஆகுற மாதிரி கதை எதுவுமே அமையல என்று சொன்னாரு. கடைசியா ஒரு கதையை ரெடி பண்ணிக்கிட்டு அவர் கிட்ட போகும் போது வினோத் கூட கடைசி படத்துக்கு கம்மிட் ஆயிட்டாரு. அவர் கூட படம் பண்ண முடியாததற்கு ஒரே காரணம் சரியான கதை அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார்.
