துறையூர் திமுக எம்.எல்.ஏவும், சட்டப்பேரவைத் துணை சபாநாயகருமான க.பொ.ரவிசங்கர் மீது குடிநீர் மற்றும் குப்பை பிரச்சினைக் குறை கூறச் சென்ற கார்த்திக்குமார் என்பவர் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் பகுதியில் பல நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என புகார் அளிக்கச் சென்றபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, எம்.எல்.ஏ தரப்பில் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் குமார் வெளியிட்டுள்ள முதல் வீடியோவில், தனது சாவுக்குத் துறையூர் எம்.எல்.ஏ ரவிசங்கர்தான் காரணம் எனப் பகிரங்கமாகத் தெரிவித்து கண்ணீர் மிட்டார். இந்தச் சம்பவம் தொகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால், அதற்குள் நிலைமை தலைகீழாக மாறியது. மருத்துவமனையில் இருந்து வெளியான மற்றொரு வீடியோவில், அதே எம்.எல்.ஏ ரவிசங்கருடன் கார்த்திக் குமார் சிரித்தபடியே அமர்ந்துள்ளார். அதில், தன்னை யாரும் தாக்கவில்லை என்றும், கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகவே அப்படி நடந்துவிட்டதாகவும், எதிர்க்கட்சிகள் இதனைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் கூறி தன் நிலைப்பாட்டைத் திடீரென மாற்றிக் கொண்டார்.
முதல் வீடியோவில் தனது உயிருக்கு ஆபத்து எனத் தெரிவித்த அதே நபர், தற்போது அடிபட்ட சில மணி நேரங்களுக்குள் எம்.எல்.ஏவுடன் அமர்ந்து ‘பல்டி’ அடித்துப் பேசியிருப்பது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அழுத்தங்கள் அல்லது மிரட்டல்கள் காரணமாகவே கார்த்திக் குமார் தன் பேச்சை மாற்றியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
