தமிழக முதலமைச்சர் விஜய்யை, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வரும் வியாழக்கிழமை ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை சென்னையில் நேரில் சந்திக்கவுள்ளார். காவிரி நீர் விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களிலும் அரசியல் சூழல் சூடபிடித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த இவர்களது சந்திப்பு பாதுகாப்பு காரணங்களால் தள்ளிப்போன நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டின் போது இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கர்நாடக மாநில விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பது தங்களது தலையாய கடமை என்றும், அதே நேரத்தில் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளித்துத் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த இரு மாநில முதலமைச்சர்களின் சந்திப்பின் போது காவிரி நீர் பகிர்வு மற்றும் அது சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
