என்ன CM சார் இப்படி கோட்டை விட்டுட்டீங்களே?….. கர்நாடகாவின் ‘ஒரே நாள்’ மெகா மாஸ்டர்பிளான்…. ரூ.29,679 கோடி முதலீடு… அதிர்ச்சியில் தமிழகம்….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில் ரூ.29,679.20 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்து சாதனை படைத்துள்ளது. அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற 68-வது உயர்நிலைக் குழு கூட்டத்தில் 17 முக்கிய திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் கர்நாடகாவில் 66,360-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் 9 புதிய தொழில் திட்டங்களுக்கு ரூ.25,710.56 கோடி மதிப்பிலும், ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் 8 விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.3,968.64 கோடி மதிப்பிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் ரூ.9,760 கோடியும், வைப்ரான்சி ரியல் எஸ்டேட்ஸ் ரூ.2,195.94 கோடியும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. மேலும் மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ், நிரானி சுகர்ஸ், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் போன்ற முன்னணி நிறுவனங்களின் பிரம்மாண்ட திட்டங்களும் இதில் அடங்கும்.

   

குறிப்பாக, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது விரிவாக்கத் திட்டத்திற்காக கர்நாடகாவில் ரூ.1,050 கோடி முதலீடு செய்யவுள்ளது தொழில் துறை வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதேவேளையில், முதலீடுகளுக்கு விரைவாக அனுமதியளிக்கும் அதே நேரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ‘ப்ரீ-கிளியரன்ஸ் ஆடிட்’ எனப்படும் முன்-தணிக்கையைக் கட்டாயமாக்க துணை முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

   

கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் தொழில் துறை வளர்ச்சியிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் மின்னல் வேகத்தில் முன்னேறி நாட்டின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மறுபுறம், பெருநிறுவனங்களின் புதிய முதலீடுகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்களை ஈர்ப்பதில் தமிழகம் தனது வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், உள்ளூர் தொழில் நிறுவனங்களைத் தக்கவைத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க விரைவான நடவடிக்கைகள் தேவை என்றும் தொழில் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.