தமிழ் சினிமாவில் கண்ணதாசன் பாடல்கள் எழுதிய காலம் திரையிசைப் பாடல்களின் பொற்காலம் என சொல்லலாம். 50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.
இதில் மற்ற பாடல் ஆசிரியர்களுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வித்தியாசமே கண்ணதாசன் இசையமைப்பாளர் பாடல் மெட்டை சொன்னதுமே வரிகளை மழை போல கொட்டுவார் என்பதுதான். எந்தவொரு மெட்டுக்குமே அவர் வீட்டுக்கு எடுத்து சென்று பாடல் எழுதியதில்லை என்பதுதான். கண்ணதாசனின் பாடல் எழுதும் வேகத்தை இளையராஜா பல மேடைகளில் விதந்தோதி பேசியுள்ளார்.
பாடல்கள் எழுதி லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் அவர் அதை சினிமாவில் பல வழிகளில் திரும்பி முதலீடு செய்தார். மாலையிட்ட மங்கை உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்தார். சினிமாவைத் தாண்டி பல தளங்களில் இயங்கிய கண்ணதாசன் எழுத்தாளர் ஜெயகாந்தனோடு நெருக்கமான நட்பில் இருந்தார். இருவரும் காங்கிரஸில் தீவிரமாக இயங்கிய காலத்தில் இந்த நட்பு மேலும் வளர்ந்தது.
இதனால் ஜெயகாந்தனை ஒரு படத்தை இயக்கவைக்கவேண்டுமென்று கண்ணதாசன் ஆசைப்பட்டுள்ளார். ஜெயகாந்தனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் “சமூகம் என்பது நாலு பேர்” என்ற படத்தை தொடங்கியுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி 3000 அடிவரை ஷூட்டிங் நடந்துள்ளது. இந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பாதியில் கைவிடப்பட்டது. அதனால் கண்ணதாசனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு ஜெயகாந்தன் கண்ணதாசன் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு ஜெயகாந்தன் யாருக்காக அழுதான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ஜனாதிபதி விருதைப் பெற்ற முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றார்.