பெங்களூரில் பிரபல கன்னட நடிகை கிரிஷி தபண்டாவின் வீட்டில், வைஷாக் என்ற இளம் தொழிலதிபர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரான வைஷாக், கடந்த ஒரு வாரமாக ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனது தோழியான நடிகை கிரிஷி தபண்டாவின் வீட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் அவர் வீட்டிற்குள் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், இச்சம்பவம் நடந்த நேரத்தில் நடிகை கிரிஷி தபண்டா வீட்டில் இல்லை என்றும், அவர் எலஹங்காவில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து எந்தவித தற்கொலைக் கடிதமும் மீட்கப்படவில்லை. போலீசாரின் தீவிர விசாரணையில், வைஷாக் கடந்த சில மாதங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததும், அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர் தனது மனைவியைப் பிரிந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனியாக வாழ்ந்து வந்ததால், தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நகர்கிறது.
அதே நேரத்தில், மறைந்த வைஷாக் மீது ஏற்கனவே ஒரு மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு வழக்கு நிலுவையில் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் அரவிந்த் ரெட்டி என்பவரிடம் கொரியர் மூலம் 6 முதல் 7 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் வைஷாக் கைது செய்யப்பட்டு, பின்னர் அந்த வழக்கிற்கு கர்நாடக நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இதனால், இந்த தற்போதைய மரணத்திற்கும் அந்த பழைய மிரட்டல் வழக்கிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா அல்லது இது முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களால் நடந்ததா என்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், வைஷாக்கின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராஜராஜேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவரது மனைவியோ கணவரின் தற்கொலையில் தமக்கு சந்தேகம் இல்லை என்றும், அவர் நடிகையுடன் நெருங்கிய உறவில் இருந்ததாகவும் ஒரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போது போலீசார் பிரேதப் பரிசோதனை அறிக்கை, தடயவியல் ஆய்வு, செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் போன்ற அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வருகின்றனர். போலீசாரின் விரிவான இறுதி அறிக்கை வெளியான பிறகே இந்த மர்ம மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை முழுமையாகத் தெரியவரும்.
