திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் உள்ள கிளாங்குண்டல் பகுதியில், இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ரத்த வழியில் திராவிட பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சுகன்யா, தொகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பாரே தவிர, ஒருபோதும் களத்தை விட்டு ஓடமாட்டார் என்று உறுதியளித்தார். மேலும், திமுக தலைமையையும் நிர்வாகிகளையும் அச்சுறுத்த பல்வேறு சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொண்ட போதிலும், கொள்கை மாறாமல் திமுக உறுதியுடன் நிற்பதாகத் தெரிவித்தார்.
தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த கனிமொழி, ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். சினிமாவில் நடப்பது போல ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பிய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றும், தொடர்ச்சியான கொலைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் ஆணவக் கொலைகள் மட்டுமே இந்த ஆட்சியில் நடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். தவெக தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தில் பெரும்பாலான நேரத்தை திமுகவைப் பற்றிப் பேசுவதற்கே செலவிடுகிறார் என்றும், ஆட்சியமைக்கத் தேவையான அனுபவம் தங்களுக்கு இல்லை என்பதை அவரே உணர்ந்துவிட்டதாகவும் எள்ளி நகையாடினார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி இடைத்தேர்தலை திணித்துள்ள தவெகவின் நடவடிக்கை மற்றும் அதன் நிதி ஆதாரம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சிகளை விலைக்கு வாங்குவதிலேயே அக்கட்சி கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார். 50 ஆண்டுகால பொதுவாழ்க்கை அனுபவம் கொண்ட முதலமைச்சரை ‘ஸ்வீட் அங்கிள்’ என்று விமர்சித்த விஜய்யை “அன்பு தம்பி விஜய்” எனக் குறிப்பிட்டுப் பேசிய கனிமொழி, திமுகவை மட்டுமே அவர் எப்போதும் தியானித்து வருகிறார் என்றும், ஆனால் மக்கள் தவெகவின் இந்த அரசியல் மாற்றத்தைப் புறக்கணித்துவிட்டார்கள் என்றும் கூறினார்.
தவெக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மகளிருக்கு ரூ.2,500 உரிமைத் தொகை மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை போன்ற எதையுமே நிறைவேற்றவில்லை என்று சாடினார். ‘வேலையில்லா பட்டதாரி’ திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வாக்களித்த ரூ.4,000 பணம் இன்னும் வந்து சேரவில்லை; ஆனால், அதற்குள் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த தனுஷே அரசியலுக்கு வந்துவிட்டார் என்று கனிமொழி நகைச்சுவையாகக் கூறியது கூட்டத்தில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது. இறுதியில், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சுகன்யாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டி உரையை முடித்தார்.
