தேசிய அரசியலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் மாற்றாக, மூன்றாவது அணியை உருவாக்கும் தீவிர முயற்சிகளில் திமுக இறங்கியுள்ளது. 2029 நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் நகர்வின் ஒரு பகுதியாக, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அண்மையில் மும்பை சென்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே) தலைவரைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து டெல்லி சென்று, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ள ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) நிறுவனரான அபிஜித் தீப்கேவையும் சந்தித்து உரையாடியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் களத்தில் சூட்டை உருவாக்கியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டைச் சிறந்த மாநிலமாக உயர்த்திய மு.க.ஸ்டாலினே நாட்டின் சிறந்த முதல்வர்” என அபிஜித் தீப்கே பாராட்டியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, தேசிய அளவில் Gen-Z இளைஞர்களின் பேராதரவைப் பெற்று வரும் இக்கட்சியையும் புதிய கூட்டணியில் இணைக்க திமுக திட்டமிட்டு வருகிறது. இந்த கூட்டணி அமைந்தால் அது தேசிய அளவில் இரு பெரிய கட்சிகளுக்கும் சவாலாக அமைவதுடன், தமிழகத்தில் தவெக போன்ற புதிய கட்சிகளின் இளைஞர் படைச் செல்வாக்கை எதிர்கொள்ளவும் திமுகவிற்கு உதவும் என்று கருதப்படுகிறது.
இதுமட்டுமன்றி, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. மேலும், உத்தரப் பிரதேச அரசியல் சூழலுக்கு ஏற்ப சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவையும், தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே.சந்திரசேகர் ராவையும் இக்கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. 2019-இல் கேசிஆர் முன்மொழிந்த மூன்றாவது அணி முயற்சியை நிராகரித்த திமுக, தற்போது தானே முன்னின்று இத்தகைய முயற்சியைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
இருப்பினும், இந்த நகர்வு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் சிவபிரியன், “தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பது வெற்றிபெற முடியாத ஒரு முயற்சி (Failed Move)” என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட வலுவான கூட்டணி அவசியம் என்பதே கள நிலவரம் என்றும், 2009-இல் ஜெயலலிதா அமைத்த மூன்றாவது அணி தேர்தலுக்குப் பின் மறைந்ததை போல இதுவும் ஆகக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார். மேலும், மாற்று அரசியலை பேசும் கரப்பான் பூச்சி கட்சி போன்ற அமைப்புகள் பாரம்பரிய அரசியல் கட்சிகளுடன் எந்த அளவுக்குப் பயணிக்கும் என்பதும் சந்தேகத்திற்குரியதே.
