“என்னைச் சந்திக்கக்கூட ரகுமானுக்கு மனமில்லை…” எமர்ஜென்சி பட விவகாரத்தில் பொங்கி எழுந்த கங்கனா ரணாவத்…!!

By Devi Ramu on தை 18, 2026

Spread the love

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை “வெறுப்பு நிறைந்த மனிதர்” எனச் சாடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தான் இயக்கிய ‘எமர்ஜென்சி’ படத்திற்கு இசையமைக்கக் கோரி அணுகியபோது, ரகுமான் தன்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டதாகவும், அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம் எனக் கூறி வாய்ப்பை நிராகரித்ததாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் ரகுமான் அளித்த பேட்டியில், ‘சாவா’ திரைப்படம் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், சமூகக் காரணங்களால் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்புகள் குறைக்கப்படுவதாகச் சந்தேகம் எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலடியாக, ரகுமானின் அரசியல் கண்ணோட்டமே அவரது கண்களை மறைத்துவிட்டதாகக் கங்கனா விமர்சித்துள்ளார்.

   

இதே பதிவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தா குறித்தும் கங்கனா ஒரு கசப்பான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அயோத்தி ராம ஜென்மபூமிக்குச் சென்றபோது மசாபா வடிவமைத்த சேலையை உடுத்தியிருந்ததாகவும், ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியல் அடையாளத்தோடு அவரது பிராண்ட் ஆடையை அணிவதை மசாபா விரும்பவில்லை என்றும் கங்கனா கூறியுள்ளார்.

   

இதனால் மிகுந்த அவமானத்திற்கு உள்ளாகி அழுததாகத் தெரிவித்த அவர், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் தேவையற்ற வெறுப்பைப் பரப்பி வருவதாகவும், இளைஞர்கள் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். திரையுலகில் நிலவும் அரசியல் சார்பு மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தற்போது ஒரு பெரும் விவாதமாக மாறியுள்ளது.