CINEMA
ஒரே ஹாலிவுட் படத்த காப்பி அடிச்சு 2 படங்கள்… ரெண்டுலயும் கமல் தான் ஹீரோ.. என்ன படம் தெரியுமா..?
தமிழ் சினிமா தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பிற மொழிப் படங்களில் இருந்து கதையை உருவி பட்டி டிங்கரிங் பார்த்து உருவாக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அப்படி உருவாக்கப்பட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. பல எம் ஜி ஆர், சிவாஜி படங்கள் இப்படி உருவாக்கப்பட்டவையே.
அந்த மரபு இன்னமும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் உலகநாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசனும் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவதில் இருந்து தப்பவில்லை. அவரின் பல ஹிட் படங்கள் பல வெளிநாட்டு படங்களின் தழுவல்தான்.
அப்படி அவர் நடித்த இரண்டு கிளாசிக்கான திரைப்படங்கள் ஒரே ஹாலிவுட் படத்தில் இருந்து உருவப்பட்டவை என்பது பல ரசிகர்களும் அறியாதது. 1972 ஆம் ஆண்டு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் மார்லன் பிராண்டோ நடிப்பில் பிரான்சிஸ் போர்டு கொப்போலோ இயக்கத்தில் உருவாகி ஆஸ்கர் விருதை பெற்ற திரைப்படம் தி காட்பாதர். இந்த படம் கேங்ஸ்டர் வகை திரைப்படங்களில் ஒரு முன்மாதிரி திரைப்படமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
இந்த படத்தை தழுவி இயக்குனர் மணிரத்னம் 1987 ஆம ஆண்டு நாயகன் திரைப்படத்தை உருவாக்கினார். இந்த படத்தில் கமலின் நடிப்பு, மேக்கப் அனைத்தும் காட்பாதர் படத்தில் நடித்த மார்லன் பிராண்டோவை ஒத்திருக்கும். காட்பாதர் படத்துக்கு மார்லன் பிராண்டோ ஆஸ்கர் விருது வாங்கியது போல கமல் நாயகன் படத்துக்காக தேசிய விருது வாங்கினார். படம் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது.
நாயகன் வெளியாகி சில வருடங்களுக்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் திரைக்கதை வசனத்தில் தேவர்மகன் திரைப்படம் வெளியானது. இந்த படமும் காட்பாதர் திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்டதுதான். மணிரத்னம் காட்பாதர் திரைப்படத்தை ஒரு கோணத்தில் தழுவி நாயகன் உருவாக்கி இருந்தார் என்றால், கமல்ஹாசன் அதை வேறொரு கோணத்தில் தழுவி உருவாக்கி இருந்தார்.
இரண்டு படங்களுமே ஒரே படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு இருந்தாலும், கதைக்களமும், திரைக்கதையும் நம் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டதால் படங்கள் இன்றளவும் கொண்டாடப்படும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.