தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள். சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும் அது போல சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட சில முயற்சிகளை மேற்கொண்டார். ரஜினியின் தொடக்கக் கால படங்கள் பலவற்றில் அவர் ஆண்ட்டி ஹீரோவாக நடித்துள்ளார்.
அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் வெள்ளி விழா கண்ட படம்தான் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் முதலில் ராமராஜனைதான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் நெகட்டிவ் தன்மையுள்ள கதாபாத்திரம் என்பதால் யோசித்துள்ளார். அதனால் ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி இறங்கியுள்ளார்.
படத்தின் ஷூட்டிங் பல கட்டங்களாக நடந்து ஒருவழியாக முடிந்த போது அனைவருக்கும் படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார். ஆனால் யாருமே படத்தில் ராஜ்கிரண் நடிப்பை நேர்மறையாக சொல்லவில்லை. படத்தையும் வெற்றி பெறாது என்று சொல்லி அவநம்பிக்கையாக பேசியுள்ளனர்.
எனவே, கமலிடம் இந்த படத்தை போட்டு காட்டி கருத்து கேட்டுள்ளார் ராஜ்கிரண். படத்தை பார்த்த கமல் ‘இந்த படம் என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால், தமிழ் சினிமாவுக்கு ஒரு தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான நடிகர் கிடைத்திருக்கிறார்’ என்று சொல்லி ராஜ்கிரணின் நடிப்பைப் பாராட்டியுள்ளார். அந்த நம்பிக்கையில் படத்தை ரிலீஸ் படமும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. ராஜ்கிரணால் ஹீரோவாக நீண்ட காலம் நடிக்க முடியவில்லை என்றாலும் குணச்சித்திர நடிகராக இன்றளவும் ஒரு முக்கியமான நடிகராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.