தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.
பாக்யராஜின் திரைவாழ்க்கையில் உச்சபட்ச வெற்றியாக அமைந்த படம் என்றால் முந்தானை முடிச்சு படத்தை சொல்லலாம். அந்த படம் பல திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனமான ‘ஏவிஎம்’ வெள்ளிவிழா நிகழ்ச்சியை நடத்தியது.

அப்போது பேசிய பாக்யராஜ் “இந்த படம் எடுக்கும்போதெல்லாம்.. சகலகலா வல்லவனுக்கு அடுத்து இந்தப் படத்தை எடுக்கிறோம். அதனால் அதை விட நல்லா வசூல் பண்ணனும் என சொல்லி என்னைப் பயமுறுத்திக் கொண்டே இருந்தார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர்” எனப் பேசினார் பாக்யராஜ்.
அதன் பின்னர் பேசிய சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன் “சகலகலா வல்லவன் படத்தைக் காட்டி அது போல முந்தானை முடிச்சு ஓடவேண்டும் என ஏவிஎம் நிறுவனம் பயமுறுத்தியதாக பாக்யராஜ் சொன்னார். இப்போது முந்தானை முடிச்சு பிச்சுகிட்டு ஓடுது. இனி என் அடுத்த படத்தில் முந்தானை முடிச்சு போல படம் ஓடவேண்டும் என என்னை பயமுறுத்தப் போகிறார்கள். இது பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்கும் இரு மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு ஆரோக்யமான போட்டி போலதான்” என மனம்திறந்து பாக்யராஜைப் பாராட்டியுள்ளார்.
