பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் என்ற இயற்பெயரை கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன், இந்திய நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார் கமலஹாசன். தனது ஐந்து வயதில் சினிமா பயணத்தை ஆரம்பித்த கமலஹாசன் தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக ஜனாதிபதியின் தங்க பதக்கத்தை வென்றார். கமலஹாசன் இது தவிர தனது நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகள், 9 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நான்கு நந்தி விருதுகள், ஒரு ராஷ்டிரபதி விருது, 2 பிலிம் பேர் விருதுகள், 18 பிலிம்பேர் தென்னக விருதுகள், கலைமாமணி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளை வென்றவர் கமலஹாசன்.
2022 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமலஹாசன் உடன் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இது கமலஹாசன் நடிப்பில் வெளியான 232 வது திரைப்படம் ஆகும். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது கமலஹாசனின் இந்த படத்தை பார்த்து அவரின் தீவிர ரசிகர் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

கமலஹாசனின் தீவிர ரசிகரான உதய பாரதி என்ற இளைஞர் விக்ரம் திரைப்படத்தை தியேட்டரில் 51 முறை பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை லிங்கன் புக் ஆப் ரெக்காட்சில் இடம் பிடித்திருக்கிறது. இதைப் பற்றி உதய பாரதி கூறும் போது, நான் கமல் சாரின் தீவிர ரசிகன். எனக்கு சாதனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் என் ஆசை கிடையாது. நான் இந்த மாதிரி அவருடைய படத்தை பார்த்து சாதனை படைத்தேன் என்றால், இப்படி ஒரு ரசிகர் நமக்கு இருக்கிறாரா என்று கமல் சார் என்னைப் பற்றி யோசிப்பார். அதற்காகத்தான் இந்த முயற்சி செய்தேன் என்று உதய பாரதி கூறியுள்ளார்.
