தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். 1978ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்
ஜனகராஜ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு கிடாரிஸ்ட்டும் ஆவார். தமிழ் சினிமாவில அதிகளவில் உலக சினிமா படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர். ஜனகராஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.
அவரோடு ஜனகராஜ் இணைந்து நடித்த நாயகன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் குணா போன்ற படங்கள்தான் அவரின் கேரியரில் அவர் நடித்த சிறப்பான படங்கள் என சொல்லலாம். அதிலும் குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் நகைச்சுவையின் உச்சமாக அமைந்தது. அந்த படத்தில் தப்பு தப்பாக அவர் துப்பறிய அதை சிலாகித்து ஆர் எஸ் சிவாஜி “தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க” என ஐஸ் வைப்பார்.
அப்படி இருவரும் அடித்த காமெடி லூட்டி அந்த படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. அதன் பின்னர் இருவரும் தெலுங்கு படமொன்றில் சிரஞ்சீவியோடு இணைந்து நடித்தனர். இந்நிலையில் இந்த காமெடி காட்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அவர்கள் காம்பினேஷனில் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தையே எடுக்கலாம் என ஆசைப்பட்டுள்ளார். ஹாலிவுட்டில் லாரல் ஹார்டி வகை படங்கள் வருவது போல அந்த படம் இருக்கும் என கூறியுள்ளார். அந்த படத்துக்கு கிரேஸி மோகனை வசனம் எழுத வைக்கலாம் எனவும் ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால் குணா படத்தின் போது ஜனகராஜுக்கும் ஆர் எஸ் சிவாஜிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அது அடிதடி வரை சென்றதால் அந்த எண்ணத்தைக் கமல் கைவிட்டுள்ளார்.
