தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், வரும் தேர்தலில் தனிச் சின்னமான ‘டார்ச்லைட்’ சின்னத்திலேயே போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சென்னையில் இன்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த காலங்களில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற சிறிய கட்சிகள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், கமல்ஹாசன் தனது தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது. சமீபத்தில் தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யத்திற்கு 234 தொகுதிகளிலும் ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்கியிருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ம.தி.மு.க போன்ற கட்சிகள் தங்களின் சொந்தச் சின்னத்திற்காகப் போராடிய முன்னுதாரணங்களைக் கருத்தில் கொண்டு, கமலஹாசனும் தனது கட்சியின் அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் களம் காணத் திட்டமிட்டுள்ளார்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கண்டறியும் நோக்கில், அக்கட்சிக்குச் செல்வாக்கு அதிகம் உள்ள 12 தொகுதிகள் அடங்கிய பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, கடந்த முறை நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட கோவை தெற்கு தொகுதி மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கும் சென்னை மாநகரத் தொகுதிகள் இந்தப் பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ளன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க-விற்காகப் பிரச்சாரம் செய்ததற்குப் பிரதிபலனாக, இந்த முறை கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற மநீம முற்படுகிறது.
நடிகராகவும் அரசியல் தலைவராகவும் தனி முத்திரை பதித்து வரும் கமல்ஹாசன், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். ஆரம்பக் காலத்தில் தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து வந்த அவர், பின்னர் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கைகோர்த்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது டார்ச்லைட் சின்னத்தின் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்து, கட்சியின் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்டுவதையே கமல்ஹாசன் தனது தற்போதைய இலக்காகக் கொண்டுள்ளார்.
