தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. காங்கிரஸுடனான இழுபறிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியுடனான பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மநீம தரப்பில் திமுகவிடம் 6 தொகுதிகள் வரை கோரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைமையைப் பொறுத்தவரை, சிறிய கூட்டணிக் கட்சிகளின் பலத்தை உணர்ந்து அவர்களுக்கு உரிய இடங்களை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. மநீம 6 தொகுதிகளைக் கோரியிருந்தாலும், திமுக தரப்பில் இரண்டு தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும், அவற்றில் மக்கள் நீதி மய்யத்திற்குச் சாதகமான மற்றும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார்.
இதன்படி, கமல்ஹாசனின் விருப்பப் பட்டியலில் சென்னை மயிலாப்பூர், ஆலந்தூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளுடன் கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் மற்றும் மதுரை மத்தி போன்ற 10-க்கும் மேற்பட்ட முக்கியத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. தங்களுக்கு ஒதுக்கப்படும் எண்ணிக்கையில் இந்த முக்கியத் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதற்கு மநீம குழுவினர் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பாளர்கள் தேர்வைப் பொறுத்தவரை, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மௌரியா மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் போன்றோரின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. ஏற்கனவே கமல்ஹாசன் திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சட்டமன்றத்திலும் தனது கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதில் அவர் முனைப்புக் காட்டி வருகிறார். “சர்வைவல் ஆஃப் பிட்டஸ்ட்” என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப, தேர்தலுக்காக சில சமரசங்களைச் செய்யவும் மநீம தயாராக இருப்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.
