மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் (X) தளத்தில் தீர்க்கமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். போர்க் காட்சிகளை ஏதோ கிரிக்கெட் போட்டியில் சிக்ஸர் அடிப்பது போலக் கண்டு ரசிப்பவர்களின் அறியாமையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார். “எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய் கொப்பளிப்பதைப் பார்த்து வியப்பவர்கள், நாளை இந்திய எண்ணெய்க் கிடங்குகளுக்கு வரப்போகும் ஆபத்தைப் புரியாதவர்கள்” என்று எச்சரித்துள்ள அவர், போர் என்பது வெறும் காட்சி அல்ல, அது சாமானியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் பேரழிவு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரினால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பு குறித்து ஆழ்ந்த கவலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, விவசாயத்திற்குத் தேவையான 70 சதவீத உரம் மற்றும் பாஸ்பேட் போன்றவை சீனா மற்றும் வளைகுடா நாடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றன என்பதை நினைவுபடுத்தியுள்ளார். பெட்ரோலியம் தீர்ந்துபோனால் அது இந்திய உழவர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க உழவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், அடுத்த மாத நெல் விதைப்பு மற்றும் உரத் தட்டுப்பாடு குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது” என்ற அவரது வரிகள், போரை ஒரு கொண்டாட்டமாகப் பார்ப்பவர்களின் மனநிலையைச் செருப்பால் அடித்தாற்போல் உணர்த்துகின்றன.
மனிதாபிமான அடிப்படையிலும் தற்காப்பு ரீதியாகவும் அண்டை நாடுகளின் அமைதி எவ்வளவு முக்கியம் என்பதை கமல் விளக்கியுள்ளார். அரபு நாடுகளின் எண்ணெய் நம் அடுப்புகளுக்கும் வாகனங்களுக்கும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, அது அடிப்படைத் தற்காப்பு” என்று குறிப்பிட்டுள்ளார். போரின் போது பாதுகாப்பான பதுங்கு குழிகளில் (Bunkers) அமர்ந்து கொண்டு சமூக வலைதளங்களில் தேசப்பற்று பேசுபவர்கள், போர் தீவிரமடைந்தால் முதலில் பதுங்குவார்கள் என்றும், களத்தில் மடிவது என்னவோ ஏழைத் தாய்மார்களின் மகன்களான ராணுவ வீரர்களே என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான், நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்” என்ற தனது விஸ்வரூபம் படப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, அந்த அழுகை ஒருபோதும் இந்தியத் தாயினுடையதாக இருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார். “நான் ஆசியாவின் பக்கம், வாழ்க இந்தியா” என்று முடித்துள்ள அவரது அறிக்கை, ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராகவும், உலகளாவிய பார்வை கொண்ட குடிமகனாகவும் போருக்கு எதிரான வலுவான குரலாக ஒலித்துள்ளது. அறியாமை கலந்த கிண்டல்கள் நாட்டிற்கோ அல்லது உலக அமைதிக்கோ எவ்விதத்திலும் உதவாது என்ற அவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
