தமிழகத்தில் பெண்களுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுடைய பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் நிலையில் பலருக்கும் இன்னும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் உள்ளது.
இதனால் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தகுதி உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் 1000 ரூபாய் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி அண்மையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கிராம வாரியாக பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் இறுதி செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியான பெண்களின் லிஸ்ட் ரெடி ஆகி வருவதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
