‘பராசக்தி’ படத்துக்கு வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசு.. கலைஞர் உள்ளே வந்த சுவாரஸ்யக் கதை..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்த திரைப்படம் 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார்.  இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்க கருணாநிதி வசனம் எழுதினார்.

படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற போது சிவாஜி தனது நடிப்புக்காகவும், கருணாநிதி புரட்சிகரமான வசனங்களுக்காகவும் அடையாள காணப்பட்டு கொண்டாடப்பட்டனர். இன்றளவும் அவர்களின் உச்சபட்ச சாதனையாக இந்த படமே நினைவில் கொள்ளப்படுகிறது. படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற காட்சிகளும், அம்பாள் என்றைக்குடா பேசினார் போன்ற வசனங்களும் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றனர்.

   

இந்த படத்துக்கு முதலில் வசனம் எழுத இருந்தது கருணாநிதி இல்லையாம். திருவாருர் தங்கராசு என்ற எழுத்தாளர்தான். அவரும் படத்துக்கான வசனத்தை எல்லாம் எழுதிக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அப்போது இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு மூலமாக அவருக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணன் பஞ்சு தினமும் எதாவது ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்துவிட்டு வந்து அந்த படத்தில் பிடித்த காட்சிகளை எல்லாம் பராசக்தி படத்தி வைக்க சொல்லி டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்களாம். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான திருவாரூர் தங்கராசு “தன்னால் இந்த படத்துக்கு வசனம் எழுத முடியாது” என சொல்லிவிட்டு விலகிவிட்டாராம்.

படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் எவ்வளவோ அவரிடம் சமாதானம் சொல்லியும் “உங்களின் அடுத்த படத்துக்கு வேண்டுமானால் நான் எழுதுகிறேன். இந்த படத்துக்கு என்னால் எழுத முடியாது” என சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம். அப்போதுதான் படத்துக்கான வசனகர்த்தாவை தேடும் படலத்தில் கருணாநிதியை பிடித்துள்ளனர் படக்குழுவினர்.

அதன் பிறகு படத்துக்கு வேறொரு வண்ணம் கிடைத்து, படத்தின் அமைப்பையே மாற்றியுள்ளார். அதன் பின்னர் படத்துக்கு வசனம் எழுத இருந்த திருவாரூர் தங்கராசுவே கருணாநிதியின் வசனத்தை பாராட்டியுள்ளார்.