தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன் இசையால் புத்துயிர் ஊட்டினார்.
2000 களுக்குப் பிறகு இசையின் வடிவம் மாறியதாலும் புது இசையமைப்பாளர்கள் அறிமுகத்தாலும் தேவா மெல்ல மெல்ல வாய்ப்புகளை இழந்து ஓரம் கட்டப்பட்டார். பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த தேவா தற்போது சில படங்களுக்கு மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அதில் அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்கும் படமும் ஒன்று.

தேவா எல்லா வகையான பாடல்களுக்கும் இசையமைத்திருந்தாலும் அவரின் அடையாளமாக இன்றளவும் சொல்லப்படுவது காணாப் பாடல்கள்தான். சென்னையின் அடையாளமாக இருந்த கானாப் பாடல்களை சினிமாவுக்கு ஏற்றதுபோல மாற்றி ஹிட்ஸ்களைக் கொடுத்தவர் தேவா. 90 களில் வந்த படங்களில் தேவா இசையமைப்பாளர் என்றால் அதில் கண்டிப்பாக ஒரு கானா பாட்டு இருக்கும் என்ற சூழலே உருவாகிவிட்டது.
பிரசாந்த், சிம்ரன் மற்றும் கரண் ஆகியோர் நடித்த ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார். அந்த படத்தில் முதலில் எந்த கானா பாடலும் இடம்பெறவில்லையாம். ஆனால் தேவா இருக்கும் போது ரசிகர்கள் கானா பாடலை எதிர்பார்ப்பார்கள் என்பதால் உருவாக்கப்பட்டதுதானாம் சலோமியா பாடல்.
பின்னர் அந்த பாடலுக்காகவே கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள் கோவாவுக்கு சுற்றுலா செல்வது போலவும் அங்கே ஆடிப்பாடுவது போலவும் அந்த பாடல் படமாக்கப்பட்டிருக்கும்.
