தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதிப் பங்கீட்டிற்காக அடிக்கடி டெல்லி செல்வதை அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகதான் கூட்டணிக்குத் தலைமை என்று கூறிவிட்டு, அமித்ஷாவின் அழைப்பிற்காக அவரது வீட்டு வாசலில் மணிக்கணக்கில் காத்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு ‘காலக்கொடுமை’ என்று அவர் வர்ணித்துள்ளார். இது தன்னாட்சி கொண்ட ஒரு திராவிடக் கட்சியின் மரபிற்கு எதிரானது என்பது அவரது முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து அரசியல் மரபுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அன்று கூட்டணிக் கட்சிகள்தான் அதிமுக அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகைக்கு வந்து சீட் கேட்டு நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி, தனது கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குக் காவடி தூக்குவது, அதிமுகவை பாஜகவின் ஒரு கிளைக் கழகமாக மாற்றிவிட்டதையே காட்டுகிறது என அவர் எள்ளி நகையாடியுள்ளார்.
வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை எடப்பாடி பழனிசாமியின் நிலைக்கு ஒப்பிட்டுள்ள நேரு, “இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்” என்று அடிவாங்கிவிட்டுச் சொல்லும் கதாபாத்திரமாகவே இபிஎஸ் மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். கூட்டணிக்குத் தலைமை தாங்குவதாகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது அமித்ஷாவின் காலடியில் அந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பித்துவிட்டு உத்தரவுக்காகக் காத்திருப்பது அதிமுக தொண்டர்களுக்கே அவமானமாக இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் கூட உச்சரிக்கப்படாததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சுயமரியாதை மிக்கத் தமிழர்கள் இத்தகைய அடிமைத்தனத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். ஒரு மயிர்க்கற்றை நீங்கினாலும் உயிர்நீக்கும் கவரிமானைப் போன்ற மானம் மிக்கவர்கள் தமிழர்கள் என்று வள்ளுவரை மேற்கோள் காட்டி, மானத்தை அடகு வைத்து அரசியல் நடத்தும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் இந்தத் தேர்தலோடு அப்புறப்படுத்துவார்கள் எனத் தீர்க்கமாகக் கூறியுள்ளார்.
இறுதியாக, இந்தத் தேர்தல் என்பது ‘டெல்லி அணி’க்கும் ‘தமிழ்நாடு அணி’க்கும் இடையிலானப் போட்டி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது எவ்வளவு உண்மையானது என்பதை பழனிசாமியின் டெல்லி பயணங்கள் உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவை டெல்லியில் அடகு வைத்தவர்களுக்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், முதலமைச்சரின் ‘திராவிட மாடல்’ ஆட்சியே மீண்டும் வெல்லும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தனது அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
