கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் மீது காங்கிரஸ் எம்பி ஜோதிமணி முன்வைத்துள்ள இந்த ஆபாசப் பேச்சு புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்நாதன் தனது பேச்சு ஒன்றில் தன்னை ஆபாசமாகத் தாக்கியதாகக் குறிப்பிட்ட ஜோதிமணி, இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், பொதுவாழ்வில் இருக்கும் பெண்களை அச்சுறுத்தி மௌனமாக்க பாஜகவும் ஆர்எஸ்எஸ்-உம் பயன்படுத்தும் ஒரு “ஆயுதம்” என்றும் தனது கண்டனத்தை ஜோதிமணியின் எக்ஸ் (X) பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில்,பெண்களை உடலாகவும், பாலியல் பொருளாகவும் மட்டுமே பார்க்கும் ஒரு “அழுகிப்போன மனநிலை” தான் இதுபோன்ற தாக்குதல்களுக்குக் காரணம் என்றும், இதற்குப் பயந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் பொதுவெளியைக் குறுக்கும் இத்தகைய இழிவான அரசியலைச் சமூகமாக எதிர்க்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுவரை இந்த விவகாரத்தில் பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், செந்தில்நாதன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
