அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், லால்குடி தொகுதியில் போட்டியிட லீமா ரோஸ் மார்ட்டினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ், கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதிதான் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இணைந்த ஒரே மாதத்தில் அவருக்கு கட்சியின் மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியும், தற்போது சட்டமன்றத் தேர்தல் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, லால்குடி தொகுதியை மையமாக வைத்து லீமா ரோஸ் தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வாரி வழங்கிய அவர், தொடர்ந்து பொதுமக்களையும் கவரும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்தார். இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலமாகவே, அவர் இந்தத் தொகுதியில் போட்டியிடக் காய் நகர்த்தி வருவது உறுதியானது. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லால்குடி தொகுதி திமுகவின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. அங்கு நிலவும் திமுகவின் ஆதிக்கத்தை உடைக்க, இம்முறை பலமான வேட்பாளரை நிறுத்த அதிமுக தலைமை திட்டமிட்டிருந்தது. குறிப்பாக, அந்தத் தொகுதியில் கணிசமாக உள்ள உடையார் சமூக மக்களின் வாக்குகளைப் பெறுவதே வெற்றியின் ரகசியம் என்பதை உணர்ந்துள்ள லீமா ரோஸ், அந்த வாக்குகளைக் குறிவைத்துத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். பணபலம் மற்றும் சமூக வாக்கு வங்கி என இரண்டையும் ஒருங்கிணைத்து வெற்றியை வசப்படுத்த அவர் முனைப்பு காட்டுகிறார்.
சிட்டிங் எம்எல்ஏக்கள் 46 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துள்ள அதிமுக, லீமா ரோஸ் போன்ற புதியவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. 150 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 17 பெண்களில் ஒருவரான லீமா ரோஸ், குறுகிய காலத்தில் கட்சியின் நம்பிக்கையைப் பெற்று வேட்பாளராக மாறியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் காணும் இவர், இரண்டு தசாப்தங்களாகத் தாரை வார்த்துக் கொடுத்த லால்குடி தொகுதியை மீண்டும் அதிமுகவின் வசமாக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
