சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (ஏப். 15) பிக் பாஸ் புகழ் ஜூலி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஒரு கையில் திமுக-வுக்கு ஆதரவான பேனரையும், மற்றொரு கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிரான பேனரையும் அவர் ஏந்தியிருந்தார். குறிப்பாக, நடிகர் விஜய்க்கு எதிரான அந்தப் பேனரில் அணில் படம் பொறிக்கப்பட்டு, அதன் மீது ‘எக்ஸ்’ (X) குறியீடு இடப்பட்டிருந்தது விஜய்யின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மெரினா கடற்கரையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாக, அங்கிருந்த போலீசார் ஜூலி உட்பட 4 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பொது இடங்களில் அனுமதியின்றி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறி பின்னர் அனுப்பி வைத்தனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜூலியின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
