அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் (JPMorgan) வங்கியின் லிவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய லோர்னா ஹஜ்தினி மீது, அவருடன் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஜூனியர் அதிகாரி ஒருவர் பாலியல் மற்றும் இனவெறி புகார்களைத் தெரிவித்து வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தப் புகாரில், லோர்னா தன்னைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், தன் இச்சைகளுக்கு இணங்கவில்லை என்றால் வேலையை விட்டுத் தூக்கிவிடுவதாக மிரட்டியதாகவும் அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார். 2024-ஆம் ஆண்டு முதல் இந்த அத்துமீறல்கள் தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் கொடுத்துத் தன்னைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் வேளையில், ‘மரி ஹில் கை’ என்ற பாட்காஸ்டர் பகிர்ந்த ஒரு ஸ்கிரீன்ஷாட் விவாதத்தைப் பெரிதாக்கியுள்ளது. லோர்னாவிடம் வழிகாட்டுதல் கோரி அனுப்பிய மெசேஜிற்கு, ஏப்ரல் 30-ஆம் தேதியன்று அவர் பதில் அனுப்பியதாக அந்த ஸ்கிரீன்ஷாட் காட்டுகிறது. வழக்கு விஸ்வரூபம் எடுத்த நேரத்தில், லோர்னா தனது லிங்க்டுஇன் கணக்கைத் திடீரென நீக்கியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தச் சம்பவம் கார்ப்பரேட் உலகில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞரின் கூற்றுப்படி, அவர் லோர்னாவின் வீட்டிற்குச் சென்றபோது கதறி அழுத பிறகும் அத்துமீறல்கள் தொடர்ந்ததாகவும், அவரது மனைவியைப் பற்றி லோர்னா இழிவாகப் பேசியதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் வங்கியின் உள்விசாரணைக் குழுவிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லாததால், தற்போது சட்ட ரீதியாகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் பெண்ணால், ஒரு ஜூனியர் அதிகாரிக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஜேபி மோர்கன் வங்கியின் செய்தித் தொடர்பாளர், “நாங்கள் நடத்திய விசாரணையில் இந்தப் புகார்களில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், லோர்னா ஹஜ்தினியும் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இரு தரப்பினரும் முரண்பட்ட தகவல்களை முன்வைத்து வரும் நிலையில், நீதிமன்ற விசாரணையின் முடிவிலேயே இதில் மறைந்திருக்கும் உண்மை என்ன என்பது உலகிற்குத் தெரியவரும்.
