“ரூ. 597 கோடி சொத்து… 38 கோடிக்கு வாட்ச்”… வேட்பாளர் ஜோஸ் சார்லஸின் சொத்து பட்டியலை பார்த்து மிரண்டு போன அதிகாரிகள்…..!

By Nanthini on பங்குனி 24, 2026

Spread the love

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தாக்கல் செய்துள்ள வேட்புமனு, அவரது பிரம்மாண்ட சொத்து மதிப்பின் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மூத்த மகனான இவர், காமராஜ் நகர் மற்றும் நெல்லிதோப்பு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தனது வேட்புமனுவில் தனக்கு சுமார் ரூ. 597 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார், இது மற்ற வேட்பாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவரது சொத்து விவரங்களின்படி, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மலைக்க வைக்கும் அளவில் உள்ளன. குறிப்பாக, ரூ. 25.67 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 44.87 கோடி மதிப்பிலான வைரங்கள் மற்றும் ரூ. 38.53 கோடி மதிப்பிலான ஆடம்பர கைக்கடிகாரங்கள் அவரிடம் உள்ளன. மேலும், பென்ஸ் மற்றும் டொயோட்டோ வெல்பயர் போன்ற விலையுயர்ந்த கார்களையும் அவர் வைத்துள்ளார். விவசாயம் அல்லாத நிலங்கள் மற்றும் குடியிருப்பு கட்டடங்களின் மதிப்பு மட்டுமே பல நூறு கோடிகளைத் தாண்டுகிறது. இவரது மனைவி சிந்து ஸ்ரீசார்லஸ் பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன.

   

பொருளாதார முதலீடுகளைப் பொறுத்தவரை, வங்கிகளில் சுமார் ரூ. 200 கோடி டெபாசிட் செய்துள்ள ஜோஸ் சார்லஸ், பங்குகளில் ரூ. 14.28 கோடி முதலீடு செய்துள்ளார். கடந்த நிதியாண்டில் மட்டும் அவருக்கு ரூ. 59.37 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சொத்துக்களுக்கு இணையாக கடன்களும் கணிசமாக உள்ளன. வங்கிக் கடன்கள், கார் லோன் மற்றும் வெளிநாட்டு வங்கி கிரெடிட் கார்டு கடன்கள் என மொத்தமாக ரூ. 210 கோடி அளவில் இவருக்குப் பொறுப்புகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

சொத்து விவரங்கள் ஒருபுறம் இருக்க, அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களும் வேட்புமனுவில் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, அமலாக்கத்துறையினரால் தொடரப்பட்ட பணமோசடி தடுப்புச் சட்ட வழக்குகள் மற்றும் மேற்கு வங்கத்தில் லாட்டரி விற்பனை தொடர்பான குற்றவியல் வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. சட்டவிரோதப் பணத்தை அசையா சொத்துகளில் முதலீடு செய்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து டெல்லி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வளவு பிரம்மாண்ட சொத்துக்களுடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ஜோஸ் சார்லஸின் அரசியல் பயணம் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.