கொங்கு மண்டலத்தில் அதிமுக தனது பிடியை மீண்டும் வலுப்படுத்தி வரும் நிலையில், ஆளுங்கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் K.சரவணன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். கொங்கு மண்டலத்தின் கணிசமான வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்துள்ள இந்தச் சமூக அமைப்பின் ஆதரவு, வரவிருக்கும் தேர்தல்களில் அதிமுகவிற்கு பெரும் பலமாக அமையும் என்று அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
மறுபுறம், ஈரோடு மாவட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணியின் வாக்கு தளத்தில் இந்த விலகல் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளதால், அதிமுக முகாம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
