தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகளிடையே மோதல் வலுத்து வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வேடசந்தூர் பகுதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் வீரா எஸ்டி சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைவு விழாவில், மோர்பட்டி மேற்கு தவெக கிளைச் செயலாளர் பிரபாகர் மற்றும் கிளைத் துணைச் செயலாளர் பாரதிராஜா தலைமையில் ரஞ்சித்குமார், கருணாகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கட்சித் தலைவர் விஜய் மேடையில் ‘மக்களை நம்பி அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்றும் உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்த போதே, தரைமட்டத்தில் நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்குச் சென்றது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து தவெக நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 3,000 தவெகவினர் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது வேடசந்தூரிலும் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. வேடசந்தூர் தொகுதியில் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் திமுக மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள், வரவிருக்கும் தேர்தலில் தவெகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
