“தலைவர் EPS தான்.. ஆனா 10 சீட் கன்பார்ம்”… பாஜக மேலிடத்தை அதிரவைத்த கூட்டணி கட்சி….!

By Nanthini on தை 22, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், தங்களது கட்சி சார்பில் போட்டியிட 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், தாங்கள் வெற்றிபெற வாய்ப்புள்ள 10 தொகுதிகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளதாகவும், அந்தத் தொகுதிகளை பாஜக தலைமை வழங்கும் என்று நம்புவதாகவும் கூறினார். குறிப்பாக, “நாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தான் நீங்கள் கொடுக்க வேண்டும்; நீங்கள் கொடுக்கும் தொகுதிகளில் நாங்கள் போட்டியிட மாட்டோம்” என்று தனது நிலைப்பாட்டை மிகவும் உறுதியாக அவர் பதிவு செய்துள்ளார். இந்த நிபந்தனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதாகவும், விரைவில் அவரைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும் ஜான் பாண்டியன் தெரிவித்தார். பாமகவில் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், ராமதாஸும் அன்புமணியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார். நாளை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தான் கலந்துகொள்ள உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.