மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சென்னையின் ஆவடியை தலைமையிடமாகக் கொண்ட ஆர்மர்டு வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 1,213 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளநிலை தொழில்நுட்பப் பணியாளர், மேலாளர், ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை ஆவடி, ஜபல்பூர், மேடக், அம்பர்நாத் ஆகிய இடங்களில் பணியமர்த்த ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிப்ளமோ, டிகிரி மற்றும் என்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
இப்பணிகளுக்கான வயது வரம்பு இளநிலை தொழில்நுட்பப் பணியாளர் முதல் துணை மேலாளர் வரை 30 வயதுக்குள்ளும், மூத்த மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகளுக்கு 65 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 25,050 முதல் ரூ. 1,29,000 வரை சம்பளமாக வழங்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://avnl.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ. 300 ஆகும்; பெண்கள், எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் ஏதுமில்லை. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.07.2026 ஆகும்.
