ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகராவார். இவரது தந்தை மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட தொகுப்பாளர் மற்றும் இவரது அண்ணன் மோகன் ராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் ஆவார். அதன் மூலம் ஜெயம் ரவிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஜெயம் ரவி 2002 ஆம் ஆண்டு தனது அண்ணன் இயக்கிய ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதிலிருந்து அவரை ஜெயம் ரவி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, தாஸ், பூலோகம், தனி ஒருவன், எங்கேயும் காதல், தில்லாலங்கடி, பேராண்மை, சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, உனக்கும் எனக்கும் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் ஜெயம் ரவி. அதற்கு அடுத்ததாக தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால் “இனி என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார் ரவி மோகன்.
