அதிர்ச்சி… அயர்ன்மேன் போட்டியில் ஜெல்லிமீன்கள் தாக்குதல்… ஒற்றைக் கையால் நீந்தி உயிர்தப்பிய வீரருக்கு… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!

By Swetha on கார்த்திகை 4, 2026

Spread the love

கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போட்டியின் நீச்சல் பிரிவில் பங்கேற்ற லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபரும் தடகள வீரருமான சத்யம் சங்கர் சகாய், ஜெல்லிமீன்களால் பலமுறை கொத்தப்பட்டார். நீந்தத் தொடங்கிய 700 மீட்டரில் முகத்திலும் கழுத்திலும் முதல் கொட்டு விழுந்த நிலையிலும் அவர் தொடர்ந்து நீந்தியுள்ளார். ஆனால், 1,200 மீட்டர் கடக்கும்போது மிகப்பெரிய ஜெல்லிமீன் ஒன்று அவரது இடது கையில் சுற்றிக்கொண்டதால் கடுமையான வலி, உடம்பில் வீக்கம் மற்றும் நெஞ்சு படபடப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படகில் இருந்தவர்கள் அதை அகற்றிய நிலையில், ஒற்றைக் கையால் நீந்தி அவர் கரையை அடைந்தார்.

கரைக்கு வந்ததும் தன்னார்வலர்கள் அவசரத்தில் வினிகரை அவரது கண்ணில் ஊற்றியதாகவும், அவரது இடது கை செயலிழந்து, முகம் மற்றும் கண்கள் வீங்கியதாகவும் சத்யம் தெரிவித்துள்ளார். மருத்துவக் கூடாரத்தில் முறையான அவசரகால சிகிச்சை அளிக்கப்படாததால், அவரது தோழி சுரபி அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு ஸ்டீராய்டு மற்றும் ஆண்டிஹிஸ்டமைன் ஊசிகள் செலுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முழுமையாகக் குணமடைய சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

   

https://www.instagram.com/p/DfPHL85DQaY/?utm_source=ig_web_button_share_sheet

   

இது குறித்து சமூக வலைதளங்களில் ‘தி ஜெல்லிமீன் குரோனிகல்ஸ்’ என்ற தலைப்பில் தனது காயங்களின் படங்களுடன் பதிவிட்டுள்ள சத்யம், இதுபோன்ற திறந்தவெளி நீர் விளையாட்டுப் போட்டிகளில் தகுந்த மருத்துவக் குழுவினரும் அவசரகால சிகிச்சை வசதிகளும் இருப்பதை அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உலகளவில் 18 அயர்ன்மேன் போட்டிகளில் பங்கேற்ற பிறகு தனக்குக் கிடைத்த முதல் ஜெல்லிமீன் கொட்டு இதுதான் என்று கூறிய அவர், “இப்போது இந்த அனுபவப் பதக்கமும் எனக்குக் கிடைத்துவிட்டது” எனக் நகைச்சுவையுடன் தனது பதிவை முடித்துள்ளார்.