நடிகர் ரவி மோகன் கடந்த 2009-ஆம் ஆண்டு சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்தார். இரு மகன்கள் உள்ள நிலையில், மாமியார் தயாரித்த படங்களில் நடித்த போது ஏற்பட்ட சம்பளப் பிரச்சினைகள் மற்றும் தலையீடுகளால் தம்பதியிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். நீதிமன்றத்தில் ஆர்த்தி கேட்ட ரூ.40 லட்சம் ஜீவனாம்ச கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிபதி, மாதம் ரூ. 3 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்கவும், மகன்களை ரவி மோகன் சந்திக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் பெரும் வைரலாகி வருகின்றன. “ஒரு உறவில் மூன்றாவது நபர் நுழையும் போது அது அழிகிறது” என்றும், “மனைவி மற்றும் குழந்தைகளை மிதித்துவிட்டுக் காதலிக்கு ரோஜா பூ கொடுப்பவர் ஆணாகவே தோற்றுவிட்டார்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார். ஜெயம் ரவியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவர் சாடியுள்ள இந்தப் பதிவுகள் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் மீண்டும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
