திரைக்களத்தையும் அரசியல் களத்தையும் ஒருசேர அதிர வைத்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்பட கசிவு விவகாரம், தற்போது ஒரு மத ரீதியான விவாதமாக உருவெடுத்துள்ளது. இணையத்தில் கசிந்த எடிட்டிங் டேபிள் மற்றும் பிரைவேட் ஷோ வெர்ஷன்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி வரும் நெட்டிசன்கள், படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் சில வசனங்களைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ‘பாய்’ (Bhai) என அழைத்து, அவர்களை எதிர்மறையான பிம்பத்தில் சித்தரிக்கும் வகையில் வசனங்கள் அமைந்துள்ளதாக எழுந்துள்ள புகார், சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அரசியல் லாபத்திற்காகவே இத்தகைய சர்ச்சை வசனங்கள் படத்தில் வைக்கப்பட்டிருப்பதாக திமுக தரப்பு குற்றம் சாட்டுகிறது. “தனது அரசியல் என்ட்ரிக்காக ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த விஜய் முனைகிறார்; இந்தப் படம் கசிந்ததே ஒரு திட்டமிட்ட புரோமோஷன் தான்” என்பது உடன்பிறப்புகளின் வாதமாக இருக்கிறது. ஆனால், இதை வன்மையாக மறுக்கும் தவெக நிர்வாகிகள், “ஆளுங்கட்சி தரப்புதான் எடிட்டிங் டேபிளில் இருந்த காட்சிகளைத் திருடி, அதில் சில வசனங்களை மட்டும் உள்நோக்கத்தோடு வெட்டி எடுத்து வைரலாக்கி, விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப் பார்க்கிறார்கள்” எனப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், சென்சார் போர்டின் கண்காணிப்பில் இருக்கும் ஒரு படத்தின் உயர்தர டிஜிட்டல் காப்பி எப்படி வெளியே கசிந்தது என்பது சினிமா ஆர்வலர்களிடையே பெரும் மர்மமாகவே நீடிக்கிறது. சென்சார் போர்டு ஏற்கனவே இந்தப் படத்திற்குப் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வரும் சூழலில், இப்போது கிளம்பியுள்ள ‘மத அரசியல்’ மற்றும் ‘குறிப்பிட்ட சமூகச் சித்தரிப்பு’ தொடர்பான புகார்கள் படக்குழுவினருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. படம் திரையரங்குகளுக்கு வரும்போது இந்த சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்படுமா அல்லது மியூட் செய்யப்படுமா என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
தமிழகம் தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், சினிமா அரசியலைத் தாண்டி ‘ஜனநாயகன்’ திரைப்படம் மத ரீதியான விவாதப் பொருளாக மாறியிருப்பது தேர்தல் களத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் சதித் தியரிகள், மறுபக்கம் அரசியல் மோதல்கள் எனத் தத்தளிக்கும் இந்த விவகாரத்தில், படத்தின் உண்மைத்தன்மை என்ன என்பது அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்குப் பிறகே தெரியவரும். ‘ஜனநாயகன்’ சொல்லப்போகும் ஜனநாயகம் அனைவரையும் அரவணைக்குமா அல்லது புதிய பிளவுகளை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
