தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணியில் கடந்த 8 மாதங்களாக இணைந்து செயல்பட்டு வந்த ‘ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி’, திடீரென அக்க கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. தவெக-வின் செயல்பாடுகளில் திருப்தியின்மை இருப்பதாகக் கூறி, அக்கட்சியின் தலைவர் எம்.எஃப். தமீம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தவெக கூட்டணியிலிருந்து வெளியேறிய ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், அந்தக் கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரியுள்ளதாகவும் அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், திமுக கூட்டணியில் இணைந்துள்ள 22-வது கட்சியாக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி உருவெடுத்துள்ளது.
ஏற்கெனவே நடிகர் விஜய் பல்வேறு அரசியல் சவால்களையும், தனிப்பட்ட விவகாரங்களையும் எதிர்கொண்டு வரும் நிலையில், கூட்டணி கட்சியும் விலகியிருப்பது தவெக தரப்பிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, தவெக கூட்டணியில் இருந்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில், திமுக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள நிலையில், தற்போது ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சியும் இணைந்திருப்பது, வரும் சட்டசபை தேர்தலில் தவெக-வின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.
