நிஜமான சினிமா சென்டிமென்ட்… ரசிகர்கள் சொன்னது பலித்தது… இனி ‘தளபதி’ அல்ல ‘முதலமைச்சர்’ விஜய்…!

By Nanthini on வைகாசி 4, 2026

Spread the love

நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரியத்தின் முட்டுக்கட்டைகளால் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது. பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டிய இப்படம், அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டே முடக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். தணிக்கை சான்றிதழ் கோரி படக்குழு நீதிமன்றம் வரை சென்றும் தீர்வு கிடைக்காத நிலையில், படம் இணையத்தில் கசிந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும், “தேர்தலுக்குப் பின் எங்கள் தலைவர் முதலமைச்சராகவே திரையில் தோன்றுவார்” என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த அதிசயத்தை நிஜமாக்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 105 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை பின்னுக்குத் தள்ளி, தவெக ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. குறிப்பாக, தூத்துக்குடி போன்ற முக்கிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று வருவது அக்கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அரசியல் வெற்றி, ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் சிக்கல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

முன்னதாக, “தேர்தலுக்கு முன் படம் வந்தால் ‘தளபதி விஜய்’ என்று வரும், தேர்தலுக்கு பின் வெற்றி பெற்று வந்தால் ‘முதலமைச்சர் விஜய்’ என்று டைட்டில் கார்டு வரும்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலாகப் பதிவிட்டு வந்தனர். ஆனால், நிஜமாகவே தவெக பெரும்பான்மை பெற்றுள்ள சூழலில், ரசிகர்கள் சொன்ன அந்த ‘வேடிக்கை’ இப்போது நிஜமாகியுள்ளது. கோட்டையை நோக்கித் தடம் பதித்துள்ள விஜய்யின் அரசியல் எழுச்சியை, அவரது சினிமா வாழ்க்கையின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ கொண்டாடும் விதமாக அமையும் என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

   

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கை சிக்கல்கள் சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தணிக்கைக் குழுவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. எது எப்படியோ, “முதல் அமைச்சர் விஜய் நடிக்கும் ஜனநாயகன்” என்ற வாசகத்துடன் திரையரங்குகளில் டைட்டில் கார்டு மின்னப்போவதை தவெக தொண்டர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கி கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் அரசியல் வருகைக்கும், அவரது கடைசிப் படத்திற்கும் கிடைத்துள்ள இந்த இரட்டை வெற்றி தமிழ்நாட்டில் புதிய அரசியல் சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.