ஜனநாயகன் என்ற பெயரை கேட்டாலே விஜய் ரசிகர்கள் உடனே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. நடிகர் விஜய் முழுநேர அரசியலில் களம் காண்பதற்கு முன்பே நடித்து முடித்த இத்திரைப்படம், கடந்த ஜனவரி 9ஆம் தேதியே ரிலீஸாக வேண்டியிருந்தது. ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் தொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களால் படம் தள்ளிப்போனது. ஒருகட்டத்தில் வழக்கை வாபஸ் பெற்று, மறு சென்சார்க்கு விண்ணப்பித்த நிலையில், படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கடந்த ஆறு மாதங்களாக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர்.
“ஒவ்வொரு பின்னடைவும் ஒரு மிகப்பெரிய முன்னடைவுக்கான தொடக்கம்” என்பதற்கு ஏற்ப, இந்தத் தாமதம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்திருக்கிறது. படம் தள்ளிப்போன காலகட்டத்தில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால், ஆரம்பத்தில் ‘தளபதி விஜய்’ என்று வரவிருந்த டைட்டில் கார்டை விட, அவர் முதல்வர் ஆன பிறகு ‘சிஎம் விஜய்’ என்று திரையில் வந்தால் கெத்தாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டனர். ரசிகர்களின் இந்த நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாகவே தற்போது ஒரு மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் வாரியம் ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியிருந்தது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் ரசிகர்கள் சற்றே குழப்பமடைந்திருந்தனர். இந்நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளரும் விஜய்யின் அட்மினுமான ஜெகதீஷ், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அந்தப் போஸ்டரில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே “மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன்” என்று கம்பீரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் முதலமைச்சர் டைட்டில் கார்டு வராது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஜெகதீஷ் அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர் என்று டேக் செய்து பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ‘ஜனவரியிலேயே வந்திருந்தால் தளபதி என்றுதான் வந்திருக்கும், இப்போது முதலமைச்சராகவே எங்க அண்ணன் வராரு’ என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளித்தெளித்து வரும் வேளையில், இத்திரைப்படம் வரும் ஜூலை 23 அல்லது 24ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
