பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கான், அதியாலா சிறையில் காலமானதாக மூத்த பத்திரிகையாளர் வஜாத் எஸ். கான் வெளியிட்ட தகவல் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ள போதிலும், இதனை அரசு தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இம்ரான் கான் பொதுவெளியில் தோன்றாததும், அவரைச் சந்திக்க வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினருக்குத் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வருவதும் இத்தகைய வதந்திகளுக்கும் சந்தேகங்களுக்கும் மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்தச் சூழலில், இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலையும் அவரது வழக்கின் தற்காலிக தாமதமும் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கியூப்கர் பக்துன்கவா முதல்வர் சொகேல் அப்ரிடி உட்பட PTI தலைவர்கள், இம்ரான் கானை அவருடைய குடும்பத்தினரும் தனிப்பட்ட மருத்துவர்களும் நேரில் சந்திக்க உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், அவரைச் சந்திக்கத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டால் பாகிஸ்தான் முழுவதும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் வெடிக்கும் என்றும், இளைஞர்களின் இந்த ஆத்திரம் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
