“நில உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்…ஒரே கிளிக்கில் மொத்த ஜாதகமும் வரும்..தமிழ்நாடு அரசின் மாஸ் அறிவிப்பு..!

By Muthu Mani on பங்குனி 5, 2026

Spread the love

தமிழ்நாடு நில உரிமையாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையில், நில ஆவணங்களைப் பெறுவதில் இருந்த சிக்கல்களைக் கலைந்து அரசு புதிய அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை பட்டா, சிட்டா மற்றும் எப்.எம்.பி (FMB) வரைபடம் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்து வந்த நிலையில், இனி இவை அனைத்தையும் ‘ஒருங்கிணைந்த நில ஆவணமாக’ (Integrated Land Record) ஒரே ஆவணமாக ஆன்லைனில் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய இணையவழிச் சேவையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.

நில உரிமையாளர்கள் தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை வங்கிகளுக்கோ அல்லது இதர அரசு அலுவலகங்களுக்கோ சமர்ப்பிக்கும் போது, பல்வேறு ஆவணங்களைத் திரட்ட வேண்டிய சிரமம் இனி இருக்காது. அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.tn.gov.in மூலம் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் புல எண் போன்ற விவரங்களை உள்ளீடு செய்து இந்த ஒருங்கிணைந்த ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கடந்த 2021-22 ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   

மேலும், நிலத்தின் உரிமையாளர் மாற்ற வரலாற்றைத் தெரிந்துகொள்ள உதவும் ‘பட்டா மாறுதல் விவரங்களின் அறிக்கை’ (History of Patta Transfer) எனும் புதிய சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் வில்லங்கச் சான்றிதழ் (EC) பெறுவதைப் போலவே, வருவாய்த் துறையிலும் 2016-ம் ஆண்டு முதல் இணைய வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பட்டா மாற்ற விவரங்களையும் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள இது வழிவகை செய்கிறது. இதன் மூலம் நிலம் வாங்குபவர்கள் அதன் முந்தைய உரிமையாளர்கள் மற்றும் பட்டா மாற்றப்பட்ட விவரங்களை மிகத் துல்லியமாகச் சரிபார்க்க முடியும்.

   

இந்த ‘பட்டா மாறுதல் விவர அறிக்கை’யைப் பெற விரும்புவோர், சிட்டிசன் போர்டல் (Citizen Portal) மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்குக் கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு 50 ரூபாய் மற்றும் செயலாக்கக் கட்டணமாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை இணையதளம் வாயிலாகச் செலுத்தியவுடன், சம்பந்தப்பட்ட நிலத்தின் வரலாறு குறித்த அறிக்கை பதிவிறக்கம் செய்யத் தயாராகிவிடும். அரசின் இந்த டிஜிட்டல் முயற்சி நில நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதோடு, சாமானிய மக்கள் அலைச்சலின்றி ஆவணங்களைப் பெறப் பெரிதும் உதவும்.