கோவை சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. “நான் போதையில் இருந்தது உண்மைதான்!”.. பெற்ற தாயின் பகீர் வாக்குமூலம்..!!

By Muthu Mani on வைகாசி 25, 2026

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாரதிபுரம் கிராமத்தில், கடந்த மே 22ஆம் தேதி மாலை கடைக்குச் சென்ற 10 வயது சிறுமி திடீரென மாயமானாள். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான கார்த்தி என்ற நபர் சிறுமியை அழைத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கார்த்தியிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, அருகில் உள்ள குளக்கரை ஒன்றில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டாள். பிரேதப் பரிசோதனையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கார்த்தி மற்றும் இந்த உண்மையை மறைக்க உதவிய அவனது நண்பன் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோ புதிய சர்ச்சையைக் கிளப்பியது. அந்த வீடியோவில், “சிறுமி காணாமல் போன அன்று அவளது தாய் கடும் மதுபோதையில் இருந்தார்; மே 23ஆம் தேதி காலையில் தான் தன் மகள் காணாமல் போனதே அவருக்குத் தெரிந்தது. மேலும், கொலைக் குற்றவாளியான கார்த்தியுடன் அந்தத் தாய்க்குத் தொடர்பு இருந்தது” என்றும், போலீஸார் விடிய விடியத் தேடியே சிறுமியின் உடலைக் மீட்டனர் என்றும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

இந்த அவதூறுப் புகார்களுக்கு விளக்கமளித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த சிறுமியின் தாய், தன் கணவர் குடும்பத்தினர் தனக்குத் தெரியாமல் மகளின் உடலை எரித்துவிட்டதாகக் கண்ணீருடன் குற்றம்சாட்டினார். மேலும், தான் மது அருந்தியிருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அவர், “என் கணவர் கருப்பு நிறக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து ஃபிரிட்ஜில் வைத்திருந்தார். அது தெரியாமல் நான் எடுத்துச் சிறிதளவு குடித்ததால் தலைசுற்றல் ஏற்பட்டுப் படுத்துவிட்டேன். அந்த நேரத்தில் தான் என் குழந்தை கடைக்குச் சென்று இந்தத் துயரம் நடந்துள்ளது. அந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதமே ஆகும் நிலையில், எங்களைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்; நாங்களே குழந்தையைப் பறிகொடுத்துவிட்டுத் துக்கத்தில் தவிக்கிறோம்” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.